கொரோனா கோழையே! வீர தமிழச்சி நான் . . .
உறுதிகொண்ட நெஞ்சுடனும், நேர்கொண்ட பார்வையுடனும்
திணவெடுத்த தோள்களுடனும் எந்த பகைவர் வந்தாலும்
ஓட ஓட விரட்டும் எம்மவரை எதிர் கொள்ள திராணியற்ற
கொரோனா கோழையே!
திரைகடலோடி திரவியம் தேடிவந்த எம்மவர் முதுகில்
அவர் அறியாமல் தொற்றி வந்து, எம் மண்ணில் புகுந்து
எம் தாய் திரு நாட்டை சூறையாட நினைத்தாயோ
கொரோனா கோழையே!
போரிலே கணவன் வீர மரணம் அடைந்தான் எனச்செய்தி கேட்டு
கலங்காமல் தன் தாய் திரு நாட்டிற்ககாக
தன் பாலகன் கையில் போர்வாள் கொடுத்து
போர்முனைக்கு சென்று வா மகனே, வென்று வா என அனுப்பிய
வீர தமிழச்சி பரம்பரை என் பரம்பரை…
வெள்ளையனை விரட்டி வெற்றி கண்ட வேலு நாச்சியார்,
வீர பெண்மணி ஜான்சி ராணி கண்ட மண் என் தாய் மண்
கொரோனா கோழையே!
கண்ணுக்கு தெரியாமல் வந்து கலங்கடிக்க நினைத்தாயோ
கொள்ளை நோய் கொடுத்து கொத்து கொத்தாய் நீ கொலை செய்ய துணிந்தாயோ
உன் சதுரங்க வேட்டைக்கு எம் சவ பெட்டிகள் கிடைக்காது
கொரோனா கோழையே!
தமிழச்சிகள் வீரத்தோடு விவேகம் கொண்டவர்கள்
போர்வாள் கொடுத்து போர் முனைக்கு அனுப்பிய நாங்கள்
கதவு தாழிட்டு கண நேரம் கூட கடந்து வெளியே வராமல்
கச்சிதமாய் போராடுவோம்
வீதி வெளியே வந்து உனக்கு உயிர் பலி கொடுக்க
நாங்கள் என்ன முட்டாள்களா
கொரோனா கோழையே!
நீ தொற்றி தொடர முடியாமல் உன் சங்கிலி தொடர் அறுந்து
தடம் பதிக்க வந்த உன் தடம் தெரியாமல் அழித்து விடுவோம்
கொரோனா கோழையே!
புதுயுக பெண்கள் நாங்கள் புத்தியோடு செயல்படுவோம்
வீட்டுக்குள்ளேயே இருந்து போராடுவது போராட்டத்தின் ஒரு யுக்திதான்
வெற்றி பெறுவோம், எம் தாய் திரு நாட்டை வெற்றி பெற செய்வோம்
ஜெய் ஹிந்த்